A Catalogue of articles found on the internet about Tamil National Alliance Parliamentarian Mr.N.Srikantha (all the sources are acknowledged - If you don't want us to reproduce please let us know by leaving a comment)

Thursday, April 23, 2009

பொதுமக்கள் இழப்பு குறித்து ஸ்ரீகாந்தா தெரிவித்த கருத்தால் சபையில் கடும் சர்ச்சை
THINAKURAL [22 - April - 2009] கே.பாலசுப்பிரமணியம், டிட்டோ குகன்

புதுமாத்தளன் பாதுகாப்பு வலயப்பகுதி மீது இடம்பெற்ற தாக்குதலின்போது ஏற்பட்ட பொது மக்களின் இறப்பு எண்ணிக்கை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.ஸ்ரீகாந்தா தெரிவித்த கருத்தை வாபஸ் பெற வேண்டுமெனவும் இல்லாவிட்டால் வெளியே துரத்துவோம் எனவும் அரச தரப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்ததையடுத்து சபையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி சபை சட்ட மூல விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. ஸ்ரீகாந்தா, வன்னி புது மாத்தளன் பாதுகாப்பு வலயம் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதல் இழப்பு தொடர்பாக பெரும் தொகையான எண்ணிக்கையொன்றை தெரிவித்தார். இதையடுத்து கோபாவேசம் அடைந்த அரச தரப்பினர், ஒட்டுமொத்தமாக கூச்சலிட்டவாறு ஸ்ரீகாந்தா எம்.பி.யை மிகவும் தரக்குறைவாக திட்ட ஆரம்பித்தனர்.
அமைச்சர்கள் மேர்வின் சில்வா, மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்தன, ஹேமகுமாரநாணயக்கார, லயனல் பிரேம சிறி உள்ளிட்ட பலர் கூச்சலிட்டவாறே சபைக்கு நடுவே வர முற்பட்டனர். அப்போது படைக்கல சேவிதர் அவர்களை தடுத்துவிட்டார்.
இதேவேளை, வெளியே நின்றிருந்த அரச தரப்பு அமைச்சர்கள், எம்.பி.க்கள் பலர் சபைக்குள் ஓடிவந்து ஸ்ரீகாந்தா எம்.பி.யை வசைபாடினர். பலர் தரக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினர்.
விவாதத்தின் போது வெறிச்சோடிக் கிடந்த அரச தரப்பு ஆசனங்கள் ஸ்ரீகாந்தாவின் குற்றச்சாட்டையடுத்து உறுப்பினர்களால் நிறைந்தன.
ஸ்ரீகாந்தா எம்.பி. தனது கூற்றை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
இல்லையேல் வெளியே துரத்துவோம் என அமைச்சர்கள் பலர் கூச்சலிட்டனர். இன்னும் சிலர் ஒழுங்குப் பிரச்சினையை கிளப்பி ஸ்ரீகாந்தா எம்.பி. கூறிய கருத்தை ஹான்சாட்டிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து ஸ்ரீகாந்தாவின் கூற்று ஹான்சாட்டிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, ஸ்ரீகாந்தா எம்.பி.தொடர்ந்து உரையாற்ற முற்பட்ட போதும் அதற்கு அரச தரப்பினர் இடமளிக்கவில்லை. தொடர்ந்து கோபாவேசத்துடன் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.
ஐ.தே.கட்சி எம்.பி.லக்ஷ்மன் கிரியெல்ல அரச தரப்பினரை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். ஜே.வி.பி.யினர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல ஸ்ரீகாந்தாவை கடுமையாக குற்றம் சாட்டினார். ஸ்ரீகாந்தா தெரிவித்த எண்ணிக்கை பிரபாகரனால் அவருக்கு கொடுக்கப்பட்டதா என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென வற்புறுத்தினார்.
அரசுக்கும் இராணுவத்தினருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்த முனையும் ஸ்ரீகாந்தா ஒரு புலியெனக் குற்றஞ்சாட்டினார்
.
அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார ஸ்ரீகாந்தாவை மிகவும் கடுமையாக விமர்சித்தார். பல அமைச்சர்களும் ஸ்ரீகாந்தாவை சாடினர்.
ஸ்ரீகாந்தாவால் தனது உரையை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அவர் பல தடவைகள் உரையாற்ற முற்பட்ட போதும் அதற்கு அரச தரப்பினர் இடம்கொடுக்கவில்லை. இந் நிலையில் ஸ்ரீகாந்தாவின் நேரம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அரச தரப்பினர் மேசையை தட்டியும் ஆரவாரமிட்டும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment